கணினி படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை
கணினி படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்,
கூடுதல் கட்டணம்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை வேகமெடுத்ததால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு உத்தரவின்பேரில் கடந்த 14-ந் தேதி முதல் நடப்பு கல்வியாண்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், பிற பள்ளிகளுக்கு செல்வதற்கு மாற்று சான்றிதழ் வழங்குதல், மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி படிப்பு கட்டணமாக மட்டும் ரூ.200 வசூல் செய்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உடனடியாக இந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையின்போது கணினி படிப்பு கட்டணத்துடன் சேர்த்து கூடுதல் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.600 வரை வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை
அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா அறிவுரைப்படி நேற்று விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களிடம் இதுவரை எத்தனை மாணவர்களுக்கு பிளஸ்-1 சேர்க்கை செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் கணினி படிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்றும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டார். அதோடு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டண தொகைக்கான ஆவணங்களையும் சரிபார்த்தார்.
மேலும் அப்பள்ளியில் சேர்க்கைக்காக வந்திருந்த மாணவர்களிடம் கணினி படிப்பு கட்டணமாக அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூல் செய்தனரா? என்று மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் கேட்டறிந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மாணவர் சேர்க்கையின்போது கணினி படிப்பு கட்டணத்துடன் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணை முடிந்ததும், அதுசம்பந்தமான அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படும் என்றார்.
Related Tags :
Next Story