காணை ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


காணை ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 10:28 PM IST (Updated: 23 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் காணை ஊராட்சி ஒன்றியம் கஞ்சனூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ரூ.3.92 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்குள்ள ஏரி வாய்க்கால், ஏழுசெம்பொன் ஏரி வாய்க்காலிலும் தலா ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 478 மதிப்பில் கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படுவதையும், ஏழுசெம்பொன்னில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.7.68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவரையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் சாலவனூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னந்தல் ஏரி வரத்து வாய்க்காலில் ரூ.4.60 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10.83 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து பனமலை சமத்துவபுரத்தில் இருந்து பெருங்களாம்பூண்டி வரை ரூ.58.60 லட்சத்தில் ஊரக வயல்வெளி சாலை அமைக்கும் பணியையும், கக்கனூர் ரேஷன் கடையில் கொரோனா 2-வது தவணை நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதையும், கக்கனூர் ஊராட்சியில் ரூ.21.98 லட்சம் மதிப்பில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கும் திட்டம் மற்றும் வீராமூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கும் பணியையும் கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கெடார் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான இடங்களில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், மல்லிகைப்பட்டு ரேஷன் கடையில் கொரோனா 2-வது தவணை நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story