2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்


2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 23 Jun 2021 5:03 PM GMT (Updated: 23 Jun 2021 5:03 PM GMT)

உளுந்தூர்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன

உளுந்தூர்பேட்டை

கொள்முதல் நிலையம்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக எடுத்து வந்து வைத்துள்ளனர். 
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்பதால் நெல் மூட்டைகளை 3 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே வைத்திருந்தனர். ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ அல்லது நெல் மணிகளில் பதருகள் முளைத்தாலோ அந்த நெல் மூட்டைகள் விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

உளுந்தூர்பேட்டையில் மழை

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் அங்கு வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளில் 2 ஆயிரத்துக்கும் மேலான மூட்டைகள் மழையில் நனைந்து பதர்கள் முளைக்கத் தொடங்கி சேதமடைந்து விட்டன. அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாகவே உளுந்தூர்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதாக கூறி இந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அரசுக்கு கோரிக்கை

எனவே உளுந்தூர்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் பாரபட்சமின்றி அரசு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் எனவும், பதர்கள் முளைத்த நெல் மூட்டைகளைக் கணக்கீட்டு  இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story