பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Jun 2021 5:16 PM GMT (Updated: 2021-06-23T22:46:52+05:30)

பண்ருட்டி அருகே வியாபாரியிடம் ரூ.60 லட்சம் முந்திரி பருப்பு வாங்கி மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரசிங்கன் குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் அருள் (வயது 40). இவர் முந்திரி பருப்பு மொத்த வியாபாரி ஆவார். 

இவரிடம் பணிக்கன்குப்பத்தை சேர்ந்த நெப்போலியன் மகன் ஷேக்ஸ்பியர், அவரது கூட்டாளி நடுசாத்திப்பட்டை சேர்ந்த ஜான்பீட்டர் ஆகியோர் முந்திரி பருப்பு மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் அடிக்கடி வந்து முந்திரி பருப்பு வாங்கி செல்வது உண்டு. 

ரூ.60 லட்சம் கடன்

இதனால் இவர்கள் மீது நம்பிக்கையின் அடிப்படையில் அருள் கடனாக முந்திரி பருப்புகளை விற்பனை செய்துள்ளார். அந்த வகையில் ரூ.60 லட்சம் வரைக்கும் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். பலமுறை அருள் பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை. 

சம்பவத்தன்று இருவரையும் சந்தித்து தனது பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று அருள் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் சேர்ந்து அருளை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அருள் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
 
வலைவீச்சு

இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஷேக்ஸ்பியர் ஜான்பீட்டர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இதேபோன்று வேறு யாரிடமாவது இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story