நீலகிரியில் 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை


நீலகிரியில் 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2021 5:18 PM GMT (Updated: 2021-06-23T22:48:14+05:30)

நீலகிரியில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஊட்டி

நீலகிரியில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு தளர்வுகள் இல்லாமல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு உள்ளது. அறிகுறிகள் தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில் 3-வது அலை வர வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து 3-வது அலையை எதிர்கொள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படுக்கை வசதிகள்

ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் உள்ளன. அங்கு பழைய கட்டிடம் என்பதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் மன்றத்தில் 107 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

 தற்போது தொற்று பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

பழங்குடியின மக்கள் 18 வயதுக்கு மேல் 18 ஆயிரம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இன்னும் 5,000 கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. 

தடுப்பூசி கிடைத்து விட்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலை எட்டப்படும். நீலகிரிக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 26.1.2020-ந் தேதி ஊட்டி குமரன் நகரை சேர்ந்த கணேஷ் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தார். அவரது பெற்றோருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Next Story