நீலகிரியில் வனச்சரகர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
நீலகிரியில் வனச்சரகர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
ஊட்டி,
நீலகிரி வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தியதை கவனிக்க தவறிய வனச்சரகர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மரங்கள் வெட்டி கடத்தல்
நீலகிரி மாவட்டத்தில் 51 சதவீத வனப்பகுதிகள் உள்ளது. தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின்படி விவசாயிகளின் பட்டா நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற அனுமதி பெற வேண்டும்.
இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி வன கோட்டம் நடுவட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கூடலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பட்டா நிலத்தில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட மாவட்ட குழுவின் அனுமதி பெறப்பட்டது. ஆனால் பட்டா நிலத்தையொட்டி வனப்பகுதியில் உள்ள நாவல் போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக தெரிகிறது.
வனத்துறையினர் விசாரணை
இதுகுறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து கோவை மண்டல வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் நீலகிரி வன அதிகாரி குருசாமி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில்வர் ஓக் மரங்கள் வெட்ட அனுமதி வாங்கி விட்டு, வனப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டியதும், கடந்த ஓராண்டாக அனுமதியின்றி பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்தியதும் தெரியவந்தது.
மேலும் நடுவட்டம் வனச்சரகத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த வனச்சரகர்கள், ஊழியர்கள் இதனை கவனிக்க தவறியது மற்றும் உடந்தையாக இருந்தது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
4 பேர் பணியிடை நீக்கம்
இதனைதொடர்ந்து நடுவட்டம் வனச்சரகர்களாக பொறுப்பு வகித்து வந்த சிவா (வயது 50), குமார் (60) ஆகிய 2 பேரை கோவை மண்டல வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் நடுவட்டம் வனவர் தரும சக்தி (28), வனக்காப்பாளர் நர்சீஸ் குட்டன் (35) ஆகியோரை நீலகிரி வன அதிகாரி குருசாமி பணியிடை நீக்கம் செய்தார். இதற்கான நகல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது நடுவட்டம் வனச்சரகராக சுப்பையா என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஊட்டியில் 2 வனச்சரகர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது வனத்துறை ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story