வலங்கைமானில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்


வலங்கைமானில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Jun 2021 6:25 PM GMT (Updated: 23 Jun 2021 6:25 PM GMT)

வலங்கைமானில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் வலங்கைமான் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி(ஜமாபந்தி) நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கிராம கணக்குகளை சரிபார்த்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாளை வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் சரியாக நிர்வகிக்கப்படாமல் இருந்த கணக்குகளை சரியாக நிர்வகிக்க அறிவுரை வழங்கியதுடன் தீர்வாயத்தில் வரப்பெற்ற வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், பட்டா உட்பரிவு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பரிசிலனை செய்தார். குறிப்பாக ஆலங்குடி வருவாய் சரகத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் தாசில்தார் பரஞ்ஜோதி, மண்டல துணை தாசில்தார் ஆனந்த், ஒன்றிய ஆணையர்கள் ஆறுமுகம், சிவக்குமார் பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் சரக ஆய்வாளர்கள் சுகுமார் பக்கிரிசாமி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி கோட்டத்துக்கு உட்பட்ட பனையூர், திருப்பத்தூர், செட்டியமூலை, ராயநல்லூர், காட்டுவாகொத்தமங்கலம், மேட்டுப்பாளையம், விளக்குடி, குன்னூர், மணலி, சாத்தங்குடி, வேலூர் தீவனம்பள்பட்டினம் உள்ளிட்ட 23 கிராம நிர்வாக அலுவலர்களும் தங்கள் கிராமத்தில் உள்ள வரவு- செலவு கணக்குகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, கணக்குகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மலர்க்கொடி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் மலைமகள், வட்ட வழங்கல் அலுவலர் உஷாராணி, உள்ளிட்ட 23 கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் வட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி(ஜமாபந்தி) கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லதா தலைமையில் நடைபெற்றது. நீடாமங்கலம் உள்வட்டத்தில் கோவில் வெண்ணி, நகர், சித்தமல்லிமேல்பாதி, ஆதனூர், ரிஷியூர், வடகாரவயல் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தாசில்தார் மணிமன்னன், மண்டல துணை தாசில்தார் அறிவழகன், தனிதாசில்தார்( சமூகபாதுகாப்புதிட்டம்) ராஜகணேஷ், வருவாய் ஆய்வாளர்கள் சிவபாலன், ரத்தினவேல், ராமதுரை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக இணையவழியில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று(புதன்கிழமை) வடுவூர் உள்வட்டத்தில் முன்னாவல்கோட்டை, செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, எடமேலையூர், எடகீழையூர் உள்ளிட்ட 17 கிராமங்களுக்கும், நாளை(வியாழக்கிழமை) கொரடாச்சேரி உள் வட்டத்தில் கமுகக்குடி, பத்தூர், ஊர்குடி, களத்தூர், மேலாளவநகதச்சேரி, கீழாளவந்தச்சேரி, அன்னவாசல், தென்பாதி உள்ளிட்ட 14 கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

குடவாசல்

குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி(ஜமாபந்தி) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். குடவாசல் தாசில்தார் ராஜன்பாபு வரவேற்றார். இதில் 21 கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக உதவி கலெக்டரிடம் வழங்கினர். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து தீர்வு காணப்படும். குறிப்பாக முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, பட்டா, சிட்டா, வீட்டு மனை பட்டா வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு ஜமாபந்தி இறுதி நாளில் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் குடவாசல் துணை தாசில்தார் குப்புசாமி, திருவிழிமிழலை சரக ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், அய்யப்பன், லஷ்மணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கலந்து கொள்ளாமல் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாபந்திக்கு திருவாரூர் கலால் துறை உதவி ஆணையர் பானுகோபன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கால் 5 நாட்கள் மட்டுமே ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்தப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் தாசில்தார் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், மண்டல துணை தாசில்தார் வெங்கட்ராமன், தேர்தல் துணை தாசில்தார் இளங்கோவன், குடிமை பொருள் துணை தாசில்தார் ஜெயபாஸ்கர், வட்ட துணை ஆய்வாளர் முருகராஜ் உள்ளிட்ட 22 வருவாய் கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள், பங்கேற்றனர்.

Next Story