பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா?
நெய்தலூரில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பாசனத்திற்காக பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நச்சலூர்
கட்டளைமேட்டு வாய்க்கால்
கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் தாயனூர் வரை பழைய, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கரூர் மாவட்டங்களான இனுங்கூர், பொய்யாமணி, நங்கவரம், சூரியனூர், நச்சலூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி திருச்சி மாவட்டங்களான புலியூர், தாயனூர் வரை சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை, நெல், கரும்பு, உளுந்து ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் 12 நாட்கள் ஆகியும் பாசனத்திற்காக மாயனூரில் இருந்து தாயனூர் வரை பாசனம் பெறும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
பாலம் கட்டுப்பணி
இதனால் விவசாய நிலங்களில் செடி, கொடிகள் முளைத்து வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் இருந்து வருகின்றனர். மேலும் நெய்தலூரில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியை விரைவில் முடித்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். தற்போது விவசாயிகள் தங்களது வயலில் கட்டளை மேட்டு வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி உழவு பணி மற்றும் பராமரிப்பு பணி செய்வதற்காக காத்திருக்கின்றனர்.
பயிரிடப்பட்ட நெல் சேதம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- கடந்த ஆண்டு பருவ மழை அதிகம் பெய்ததாலும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகரித்ததால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடர்ந்து தங்களது வயலில் நெல் மற்றும் உளுந்து பயிரிட்டனர்.
பயிரிடப்பட்ட நெல் கன மழையின் காரணமாக நனைந்து தண்ணீர் நிரம்பி அழுகி வயலில் அப்படியே முளைத்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்தாண்டாவது சரியான காலத்தில் நெல் பயிரிட்டு மகசூல் பெருக்க விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு போல் இப்போதும் காலதாமதமாக தண்ணீர் திறந்தால் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி விடும். இதனால் விவசாய குடும்பத்தை மிகவும் கவலையில் தள்ளிவிடும்.
கோரிக்கை
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைவில் முடித்து கடை மடையில்உள்ள விவசாய நிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்கப்படுமா? என்று எதிர்பார்த்து உள்ளோம். இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story