நாமக்கல், பரமத்தி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்


நாமக்கல், பரமத்தி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 Jun 2021 7:07 PM GMT (Updated: 2021-06-24T00:45:54+05:30)

நாமக்கல், பரமத்தி பகுதிகளில் ஊரடங்கை மீறி திறந்திருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிரடியாக உத்தரவிட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் 
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பரமத்தி பேரூராட்சியில் ரூ.38.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது வேலூர் பேரூராட்சி குப்புச்சிபாளையம் பகுதியில் திறந்திருந்த அரசி கடையை பார்வையிட்ட கலெக்டர், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்தார். தொடர்ந்து கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புலவர்பாளையம் பஸ் நிறுத்தம், தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்த பகுதிகளில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்திருந்த ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடை, இரும்பு பட்டறை, டயர் விற்பனை நிலையம் மற்றும் நாமக்கல் நகராட்சி பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் திறந்திருந்த பழக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றின் தீவிரம் குறித்து அறிவுறுத்தி, அதிரடியாக அபராதம் விதித்தார். இதேபோல் மளிகை கடை, பேட்டரி கடை உள்பட 3 கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், நாமக்கல் தாசில்தார் (பொறுப்பு) ருக்மணி, பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story