மானாமதுரையில், ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம்


மானாமதுரையில், ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:03 AM IST (Updated: 24 Jun 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததால் மானாமதுரையில் ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

மானாமதுரை,

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததால் மானாமதுரையில் ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன

மண்பாண்ட தொழில்

தமிழகத்தில் மானாமதுரை என்றாலே மண்பாண்ட தொழில் பிரசித்தம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதுதவிர இங்கு புகழ்பெற்ற கடம் தயாரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் வரும் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு விதமான மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் விழாவிற்காக பொங்கல் பானைகள் தயாரிப்பது, கோடைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஊற்றி வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள், மண் கூஜாக்கள், அலங்கார மண்பாண்ட பொருட்களும், கார்த்திகை விழாவின் போது பல்வேறு வகையான அகல் விளக்குகள், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகள் தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலை எதுவும் இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் பழைய இயல்பு நிலை திரும்பி கொண்டு இருக்கின்றது. மானாமதுரையில் பல இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானைகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர்.

ரூ.50 லட்சம் பொருட்கள் தேக்கம்

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
 ஏற்கனவே கடந்தாண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழில் அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது 2-வது முறையாக பரவல் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக மிகவும் அவதிப்பட்டோம். தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்ததையடுத்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு முன்பாக பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவதற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்பாண்ட பொருட்களை விற்பனைக்கு அனுப்பி முடியாமல் உள்ளோம். அவை தேக்க நிலையில் உள்ளது.
எனவே அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். அது போல் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கரகம், பொங்கல் பானைகள், அகல் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story