ஜல்லிக்கட்டில் பல பரிசுகளை வென்ற கோவில் காளை உயிரிழப்பு
ஜல்லிக்கட்டில் பல பரிசுகளை வென்ற கோவில் காளை உயிரிழந்தது
மதுரை,ஜூன்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கிராமத்தின் கோவில் காளை நேற்று காலை திடீரென உயிரிழந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திருமோகூர் காளியம்மன் கோவில் முன்பு காளையை மஞ்சள், பன்னீர், தண்ணீர் கலந்து குளிப்பாட்டி அலங்காரம் செய்து வைத்தனர். இதையடுத்து கிராம மக்கள் காளைக்கு மாலை அணிவித்தும், வேட்டி, துண்டு சாற்றியும் மரியாதை செலுத்தினர். மேலும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் அணி அணியாக திரண்டு வந்து காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து காளையை தூக்கிச்சென்று ஊரை வலம் வந்து மந்தை அருகே அடக்கம் செய்தனர்.
இந்த காளையை பராமரித்து வந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கூறுகையில், “இந்தக் காளை கோவிலுக்காக வாங்கி விடப்பட்டது. இதனை காளியாத்தா என்று செல்லமாக அழைப்போம். இந்தக் காளை தமிழகம் முழுவதிலும் 60-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்று வந்துள்ளது. குறிப்பாக வருடம் தோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தவறாமல் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது. இந்தக் காளையின் இறப்பு எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறினர்.
Related Tags :
Next Story