ரூ12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம்


ரூ12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:26 AM IST (Updated: 24 Jun 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

விபத்து வழக்கில் சிக்கியவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கிணத்துக்கடவு

விபத்து வழக்கில் சிக்கியவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்து உள்ளார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கார் டிரைவர் கைது  

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த சென்றாம்பாளையம் பிரிவு அருகே 4 வழிச்சாலையில் கடந்த 20-ந் தேதி மொபட் மீது ஒரு சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் விவசாயி பலியானார். 

இது தொடர்பாக சொகுசு காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். 

இந்த சொகுசு கார் ஒரு தனியார் மில் அதிபருக்கு சொந்தமானது ஆகும். இந்த நிலையில் கைதான கார் டிரைவர் சுரேசை போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று இன்ஸ் பெக்டர் சுரேஷ், ஏட்டு வெங்கடாச்சலம் ஆகியோர் மில் மேலாளரிடம் கேட்டு உள்ளனர். 

ரூ.12 ஆயிரம் லஞ்சம்  

இதையடுத்து அவர் போலீஸ் நிலையம் வந்து ரூ.12 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்து கார் டிரைவரை ஜாமீனில் அழைத்துச்சென்றார். பின்னர் அவர் இது குறித்து மில் உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் இந்த லஞ்சம் தொடர்பாக தனக்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். 

உடனே அவர் இந்த விஷயத்தை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினத்திடம் தெரிவித்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.  

துணை சூப்பிரண்டு விசாரணை  

இதைத்தொடர்ந்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தனியார் மில் மேலாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

அதன் அறிக்கை போலீஸ் சூப்பிரண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இதையடுத்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு வெங்கடாச்சலம் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் அதிரடி நடவடிக்கை எடுத்தார். 

இதற்கிடையே அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளனர். 

பணியிடை நீக்கம் 

இது தொடர்பாக கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் சொகுசு கார் டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். 

அவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ் பெக்டர் சுரேஷ், ஏட்டு வெங்கடாச்சலம் ஆகியோர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது. 

 இன்ஸ்பெக்டர் சுரேஷ், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு செல்வதற்குள் அவர் லஞ்சப்புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 



Next Story