பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு,கிடு உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி


பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு,கிடு உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Jun 2021 2:06 AM IST (Updated: 24 Jun 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகளை அறுவடை செய்து விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த தக்காளிகளை ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி லாரிகளில் எடுத்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து 15 கிலோ ஒரு கூடை தக்காளி ரூ.150-க்கும் விற்பனையானது. சில்லரையாக ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் விளை நிலத்திலேயே விட்டு வந்தனர்.

தக்காளி விலை வீழ்ச்சியால் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய், முள்ளங்கி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட மாற்று பயிர்களை பயிரிட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தற்போது தக்காளி வரத்து குறைய தொடங்கியது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்தநிலையில் நேற்று பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரகத்தற்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனையான தக்காளி தற்போது ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையாகிறது. தக்காளி விலை கிடு, கிடு உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story