தொப்பூா் அருகே வயதான தம்பதி மர்மசாவு-சொத்து தகராறில் கொலையா? போலீஸ் விசாரணை
தொப்பூர் அருகே வயதான தம்பதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதனால் அவர்கள் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). இவருடைய மனைவி கோசலை (75). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதில் ஒரு மகள் இறந்து விட்டார். துரைசாமியும், கோசலையும் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன்-மனைவி 2 பேரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் வயதான தம்பதி வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்த போது துரைசாமியும், கோசலையும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் கிடந்த விஷபாட்டிலை போலீசார் கைப்பற்றினர். வீட்டில் வயதான தம்பதி மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது விவசாயியான முதியவர் துரைசாமிக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது. இதுதொடர்பாக அவருக்கும், மகன், மகள்களுக்கும் தகராறு இருந்து வந்ததும், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் சொத்து தகராறில் வயதான தம்பதி உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வயது முதிர்வு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழு விசாரணையின் முடிவில் தான் வயதான தம்பதி எப்படி இறந்தனர் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். வீட்டில் வயதான தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story