பாலக்கோடு அருகே இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை


பாலக்கோடு அருகே இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை
x
தினத்தந்தி 24 Jun 2021 2:21 AM IST (Updated: 24 Jun 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் சென்று வழங்கினார்.

பாலக்கோடு,

பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் ஊராட்சிக்குட்பட்ட வேடம்பட்டி, காமராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பகுதியையொட்டி உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முகவரி, ஆதார் கார்டு இல்லாததால்  அரசு திட்டங்களை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி அந்த கிராமங்களுக்கு சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டு இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது குடும்ப அட்டை, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் இருளர் இன மக்கள் வசிக்கும் காலனிகளுக்கு சென்று அவர்களுக்கு குடும்ப அட்டை மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று கலெக்டர் திவ்யதர்சினி இருளா் இனமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேரில் சென்று 52 பேருக்கு வீட்டுமனை பட்டா, 12 பேருக்கு புதிய குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்கினார். 

மேலும் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை தலா ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள், 5 பேருக்கு இருளர் இன சாதி சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பொறுப்பு) தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் அசோக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் சரளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story