ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,500 கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,500 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 2:22 AM IST (Updated: 24 Jun 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட  இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,500 கனஅடி வந்து கொண்டிருந்தது. 
இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story