திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது-ஆம்னி வேன் பறிமுதல்
திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
மதுபாட்டில்கள் கடத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் நாமக்கல்லை சேர்ந்த மதுப்பிரியர்கள் அருகில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்களை கடத்தி வருகின்றனர். சிலர் அதிகபடியான மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனை தடுக்க மாவட்ட எல்லையில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் மதுபாட்டில்களை கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
ஆம்னி வேன் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று பரமத்திவேலூர் போலீசார், பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் வழியாக திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 67 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கபிலர்மலை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் பெரியசாமி (வயது 24), அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் மோகன் என்பது தெரியவந்தது.
மேலும், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி, அதனை நாமக்கல்லில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 67 மதுபாட்டில்கள், ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் காட்டுப்புத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபானங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஈரோடு மாவட்ட பட்லூர் பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் ரவிக்குமார் (28), பழனிசாமி மகன் நல்லமுத்து (28) ஆகியோர் என்பதும், 35 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story