மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
கொல்லிமலை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங், வட்டார மருத்துவ அலுவலரிடம் கொல்லிமலை பகுதியில் கொரோனா நோய்த்தொற்றின் தன்மை குறித்தும், வீடு, வீடாக சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யும் பணிகள் குறித்தும், குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறதா? என்றும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறுவை சிகிச்சைகள் குறித்தும், பொதுமக்களின் சுகாதார விழிப்புணர்வு நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் பதிலளிக்கையில் கிராமங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இருப்பதாலும், மக்கள் நெருக்கம் அதிக அளவில் இல்லாததாலும், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகம் இல்லை என்று தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் பள்ளிகளின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதற்கு அலுவலர்கள் தெரிவிக்கையில், கொல்லிமலை பகுதியில் மொத்தம் உள்ள 72 அரசு பள்ளிகளில் 6 ஆயிரத்து 382 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றார்கள். மேலும், 3 தனியார் பள்ளிகள் மூலமாக 464 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிப்பதை தொடங்கி வைத்து உள்ளார். மேலும் பிற தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்த பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொல்லிமலை பகுதி மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பழங்குடியினர் நலத்துறையினர் உறுதி செய்திட வேண்டும் என்றார்.
மேலும், கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகள் வாரியாக பாடங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படும் நேரம் குறித்த விவரங்களை மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், கொல்லிமலையில் பொதுமக்களின் இருப்பிட பகுதிக்கே சென்று அங்குள்ள அரசு பள்ளிக்கூட கட்டிடம், அரசு கட்டிடங்களில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வாசலூர்பட்டி, திண்ணனூர் நாடு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த அவர், அங்கு மலைவாழ் மக்களிடம் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் பற்றி எடுத்துரைத்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகள் இருந்தாலோ, கடந்த 10 நாட்களுக்குள் இவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ உடனே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கோ சென்று மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது, நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், கொல்லிமலை ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராமசாமி, கொல்லிமலை வட்டார மருத்துவ அலுவலர் புஷ்பராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story