வால்டாக்ஸ் சாலையில் நடந்து வரும் கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் ஆய்வு தரமான முறையில் விரைந்து முடிக்க உத்தரவு
சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பி.ஆகாஷ் பார்வையிட்டு தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் தெருக்களில் அமைந்துள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகளை கடந்த 21-ந் தேதி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் இந்த பணிகள் நடக்கிறது.
குறிப்பாக பகுதி-5 ராயபுரத்துக்கு உட்பட்ட சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பி.ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பகுதி பொறியாளர் ஜி.கஜபதி, உதவி பொறியாளர் எம்.எம்.தாரிகா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் ராயபுரம் பகுதியில் 50 தெருக்கள் உள்ளன. இந்த பராமரிப்பு பணிகளுக்காக 29 தூர்வாரும் எந்திரங்கள், 15 ஜெட்ராடிங் எந்திரங்கள், 6 சூப்பர் சக்கர் எந்திரங்கள் மற்றும் 1 சீவர் லாரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியின் மூலமாக பெருமளவு கசடுகள் அகற்றப்பட்டு உள்ளன. தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பருவ மழை காலங்களில் எங்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடந்து வரும் கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பருவ மழையை எதிர்கொள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story