ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது


ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 1:59 PM IST (Updated: 24 Jun 2021 1:59 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே விவசாயியின் நிலத்தை மதிப்பீடு செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்
ஆத்தூர் அருகே விவசாயியின் நிலத்தை மதிப்பீடு செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வருவாய் ஆய்வாளர்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மணக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மனைவி பெயரில் 37 சென்ட் இடத்தை அதே கிராமத்தில் சமீபத்தில் வாங்கி உள்ளார். இதற்கான பத்திரப்பதிவு பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
அந்த பத்திரத்தை சரியான மதிப்பீடு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சேலம் தனித்துணை ஆட்சியருக்கு (முத்திரைத்தாள்) அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் முத்திரைத்தாள் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் செந்தில்குமாருக்கு (வயது 50) அந்த நிலத்தை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அந்த விவசாயியின் மனு வந்திருந்தது. 
அந்த நிலத்தை சரியான மதிப்பீடு செய்ய வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் அந்த விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 
லஞ்சம்
அதே நேரத்தில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த விவசாயி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வருவாய் ஆய்வாளரை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். 
அதன்படி நேற்று காலையில் விவசாயி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு ரூ.35 ஆயிரம் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டில் வந்து லஞ்ச பணத்தை தருமாறு வருவாய் ஆய்வாளர் கேட்டதாக கூறப்படுகிறது. 
கைது
உடனே ரசாயன பொடி தடவிய ரூ.35 ஆயிரத்தை அந்த விவசாயியிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டப்படி அவர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்று பணத்தை கொடுக்கும் போது அந்த பகுதியில் மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.  இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story