வரதட்சணை கேட்டு கொடுமை காதல் திருமணம் செய்த பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது


வரதட்சணை கேட்டு கொடுமை காதல் திருமணம் செய்த பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 7:21 PM IST (Updated: 24 Jun 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே காதலித்து திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கேட்டு உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரையா. இவரது மனைவி ராமுத்தாய்(வயது 45). இவர்களது மகன் மகா பிரபு (25). பால் கறக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதிலும், 6 மாதத்திலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 
மகா பிரபுவுக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வரதட்சணையாக பெற்றோரிடம் நகைகள் வாங்கி வரும்படி அகிலாண்டேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
எரித்துக்கொல்ல முயற்சி
இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகா பிரபு, தாய்  ராமுத்தாய்(45), தம்பி அரவிந்த்குமார்(19) ஆகியோர் சேர்ந்து அகிலாண்டேஸ்வரி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அவர்கள் அகிலாண்டேஸ்வரியை ஒரு அறையில் போட்டு கதவை பூட்டினர். இதில் நெருப்பின் வலி தாங்காமல் அகிலாண்டேஸ்வரி அலறி துடித்தார். 
இதையடுத்து மகாபிரபு மனம் தாங்காமல் கதவை திறந்து அவரை மீட்டார். பின்னர் அகிலாண்டேஸ்வரி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று அகிலாண்டேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகா பிரபு, ராமுத்தாய், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story