ஊடுபயிராக ரூ.30 லட்சம் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
சங்கராபுரம் அருகே ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரபகுதியில் வசிக்கும் விவசாயிகள், தங்களது விளை நிலத்தில் கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இருப்பினும் சில விவசாயிகள், பணத்துக்கு ஆசைப்பட்டு பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதும், இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் நேரில் சென்று கஞ்சா செடிகளை அழித்து, சம்பந்தப்பட்ட விவசாயியை கைது செய்து சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகி விட்டது.
அதிரடி சோதனை
அந்த வகையில் சங்கராபுரம் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் விவசாயி ஒருவர் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும், அவை தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கஞ்சா செடிகளை அழிக்க உத்தரவிட்டார்.
அதன்படி திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வடபொன்பரப்பி போலீசார் மூலக்காடு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட விவசாய நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
வேரோடு பிடுங்கி அழிப்பு
அங்கு மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு இடையே கஞ்சா செடிகள் செழித்து வளர்ந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மூலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான கண்ணன்(வயது 50) என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story