திட்டக்குடி அருகே வீட்டு கதவு பூட்டை உடைத்து நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடி அருகே வீட்டு கதவு பூட்டை உடைத்து நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jun 2021 10:56 PM IST (Updated: 24 Jun 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே வீட்டு கதவு பூட்டை உடைத்து மர்ம மனிதர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநத்தம், 

திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜாமணி (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் என 2 குழந்தைகள்  உள்ளனர்.

இந்த நிலையில் ஆவட்டி கூட்டுரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் மேல்தளத்தில் ராஜாமணி தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  கீழ்தளத்தில் உள்ள வீட்டில் செங்கல்பட்டை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். 

இவர் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக இவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

வீட்டு கதவு உடைப்பு

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ராஜாமணி தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான அதர்நத்தம் கிராமத்துக்கு சென்றுவிட்டார். 
நேற்று, மோகன் அங்கு வந்த போது, அவரது வீட்டு கதவு உடைந்த நிலையில் கிடந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, மேல்பக்கமாக திருப்பி வைக்கப்பட்டு இருந்தது.

உடன், இவர் மேல் தளத்துக்கு சென்று பார்த்த போது, ராஜாமணியின் வீட்டு கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ராஜாமணிக்கு தகவல் தெரிவித்தார்.  

‘ஹார்டுடிஸ்கை’யும் திருடினர்

அதன்பேரில் அவர் தனது வீட்டுக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே ராமநத்தம் போலீசாரும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கெண்டனர். 

மோகன் வசிக்கும் வீட்டில் எந்த பொருளும் இல்லாததால், ராஜாமணி வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர். 

மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிகொள்வோம் என்று எண்ணிய மர்ம மனிதர்கள், கேமரா காட்சிகளை பதிவு செய்யும், ‘ஹார்டுடிஸ்கை’யும் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story