ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை


ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 11:12 PM IST (Updated: 24 Jun 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒப்பந்த பணியாளர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒப்பந்தம் அடிப்படையில் 170 பேர் பணிபுரிகின்றனர். 

அவர்கள் தினமும் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வாகனங்களில் சென்று சேகரிப்பது, முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா காலத்திலும் அவர்கள் தன்னலம் கருதாமல் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையே தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சம்பளம் வழங்க வேண்டும்

ஊட்டி நகராட்சியில் துப்புரவு பணியில் ஒப்பந்த பணியாளர்கள் 170 பேர் உள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரிந்து வருகிறோம். கடந்த மே மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கும்போது நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தொகையை வழங்கவில்லை. எனவே, ஒப்பந்த தொகை வந்த பின்பு ஊதியம் வழங்குவதாக கூறுகிறார்.

இந்த மாதம் முடிந்தால் 2 மாத ஊதியம் வழங்க வேண்டும். தற்போது 2 மாதமாக ஊதியம் இல்லாமல் ஒப்பந்த பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களான எங்களுக்கு ஊதியம் வழங்காமல் வேலை வாங்குவதை ஏற்க முடியாது. மேலும் முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.

எனவே, கலெக்டர் தலையிட்டு மே மாத ஊதியம் மற்றும் நடப்பு மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்து, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story