கொரோனா தடுப்பூசி மையம் ஊட்டி மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம்


கொரோனா தடுப்பூசி மையம் ஊட்டி மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:13 PM IST (Updated: 24 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

தொற்று பரவாமல் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றப்பட்டது.

ஊட்டி

தொற்று பரவாமல் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றப்பட்டது.

தொற்று பரவும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியினர்கள், மாற்றுத்திறனாளிகள், தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று முதல் பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், மஞ்சூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறைந்த டோஸ்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் தொற்று பரவும் அபாயம் இருந்தது. அங்கு கொரோனா வார்டுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் தடுப்பூசி போட வருபவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

300 பேருக்கு தடுப்பூசி

இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த தடுப்பூசி செலுத்தும் மையம் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
நேற்று காலையில் இருந்து அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்கனவே டோக்கன்கள் பெற்றிருந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
 
அவர்களது விவரங்கள் பதிவு செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story