கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது. இதனால் கடைமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.
அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கீழணைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் வந்தடைந்தது.
கீழ் அணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். 7 அடியை எட்டும் நிலையில், கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் கடைமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
அதேநேரத்தில் வீராணம் ஏரியில் ரூ.74 கோடி செலவில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. எனவே இனி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில், எஞ்சிய பணிகள் தண்ணீர் இல்லாத காலங்களில் செய்யப்படும் என தெரிகிறது.
இதபோல் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரி தூர்வார ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகளும் இதுபோன்ற காரணங்களால் முடிவு பெறவில்லை என்கிறார்கள் இதை சார்ந்துள்ள விவசாயிகள்.
ஆகையால் எதிர்வரும் காலங்களில் மராமத்து பணிகள் முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story