கொடைக்கானலில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்


கொடைக்கானலில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்
x
தினத்தந்தி 25 Jun 2021 12:21 AM IST (Updated: 25 Jun 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

கொடைக்கானல்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இதற்கிடையே சுற்றுலா இடங்களில் வசித்து வரும் குரங்குகள், மக்கள் நடமாட்டம் இல்லாததால் உணவு கிடைக்காமல் தவித்து வந்தன. 
இதையடுத்து அவை உணவு, தண்ணீர் தேடி கொடைக்கானல் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. அந்த வகையில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுப்பதுடன், பொருட்களை சேதப்படுத்தின. மேலும் கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்து வந்தன. 
இதையடுத்து அட்டகாசம் ெசய்யும் குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன்பேரில் நேற்று கொடைக்கானல் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா தலைமையிலான வன ஊழியர்கள் அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க 2 இடங்களில் கூண்டுகள் வைத்தனர். மேலும் அவற்றில் வாழைப்பழங்களை வைத்தனர். 
இதையடுத்து அதை சாப்பிடுவதற்காக வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுகளில் சிக்கின. இதையடுத்து அந்த குரங்குகளை வனத்துறை ஊழியர்கள், அப்சர்வேட்டரியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

Next Story