குளித்தலையில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் கட்டப்படுமா?
குளித்தலையில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குளித்தலை
சார் பதிவாளர் அலுவலகம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் திருச்சி - கரூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை ஒட்டியும், போலீஸ் நிலையத்தின் எதிரேயும் குளித்தலை சார் பதிவாளர் அலுவலகம் (சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்) பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில் குளித்தலை நகரப்பகுதி மட்டுமல்லாது குளித்தலை வட்டப்பகுதியில் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீடு, வீட்டு மனை, போன்றவற்றை வாங்க, விற்க பத்திர பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்திற்கும் வில்லங்கச்சான்று பெறுதல், திருமணங்களை பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வந்து செல்வார்கள். குளித்தலையில் உள்ள இந்த சார்பதிவாளர் அலுவலகம் 35 சென்ட் அளவுள்ள நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.
செயல்படுத்த முடியாத நிலை
1905-ம் ஆண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் இக்கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்து வலுவிழக்க தொடங்கியுள்ளது. வலுவிழந்த இந்த கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் வரை வாடகை கட்டிடத்தில் அலுவலகத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு குளித்தலை பெரியபாலம் பரிசல்துறை சாலையில் உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போதுவரை அங்கு செயல்பட்டு வருகிறது.
இடமாற்றம்
குளித்தலை சார் பதிவாளர் அலுவலகம் ஏற்கனவே அமைந்திருந்த இடம் குளித்தலை பஸ்நிலைத்தில் இருந்து நடந்து சென்று வரும் தொலைவில் இருந்தது. அதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பஸ்சில் வரும் பொதுமக்கள் சுலபமாக இந்த அலுவலகத்திற்கு நடந்தே வந்து சென்றனர்.
ஆனால் தற்போது குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் உள்ள பெரியபாலம் பரிசல்துறை சாலையில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருவதால், அந்த அலுவலகத்திற்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அலுவலம் இடமாற்றம் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.
எதிர்பார்ப்பு
இந்த சூழ்நிலையில் குளித்தலையில் உள்ள பழைய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டத்தேவையான தொகை குறித்து நிதி ஒதுக்கீடு செய்ய பொதுப்பணித்துறை (கட்டிடம்) மூலம் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கடந்த 2020-ல் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுக்கிறது. இருப்பினும் புதிய கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பழைய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story