ராசிபுரம் அருகே ‘டேபிள் பேனை’ தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் 1½ வயது குழந்தை சாவு; காப்பாற்ற சென்ற தாயும் பலியான பரிதாபம்
ராசிபுரம் அருகே டேபிள் பேனை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் 1½ வயது குழந்தை இறந்தது. குழந்தையை காப்பாற்ற சென்ற தாயும் மின்சாரம் தாக்கி பலியானார்.
ராசிபுரம்:
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது35). பி.காம் பட்டதாரியான இவர், தற்போது லாரியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவருடைய அத்தை பெத்தி என்பவரது மகளும், என்ஜினீயருமான பிரியாவுக்கும் (28) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வைஷ்யா (4) என்ற மகளும், 1½ வயதில் முகுந்தன் என்ற குழந்தையும் இருந்தனர்.
தாய்-குழந்தை பலி
இந்தநிலையில் நேற்று ராஜா வேலைக்கு சென்று விட்டார். மதியம் பிரியா தனது குழந்தை முகுந்தனை விளையாட வைத்து விட்டு, வீட்டை தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த குழந்தை முகுந்தன் அருகில் இருந்த டேபிள் பேனை தொட்டான். இதனால் திடீரென குழந்தையை மின்சாரம் தாக்கியது.
இதனால் வலியால் துடித்த குழந்தையை பார்த்து, தாய் பிரியா அலறினார். உடனடியாக குழந்தையை காப்பாற்றும் நோக்கில் அவர் விரைந்து சென்று தூக்கினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் பிரியாவும், குழந்தை முகுந்தனும் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
கதறி அழுதனர்
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து அவர்கள் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தடயவியல் நிபுணர் வடிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் மின்சாரம் தாக்கி பலியான தாய், குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிரியாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு, 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
உதவி கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பெத்தி கொடுத்த புகாரின்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தையும், அதனை காப்பாற்ற சென்ற தாயும் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story