நாமக்கல்லில் கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
நாமக்கல் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த, கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
கிருமிநாசினி தெளிப்பு
நாமக்கல் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 13 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி இருப்பதால், 5 இடங்களில் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. ராமாபுரம்புதூர், கணேசபுரம், இ.பி.காலனி, என்.ஜி.ஓ.காலனி, ஜெட்டிக்குளம் தெரு, கணபதிநகர், தில்லைபுரம் உள்பட 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தகரத்தால் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ராமாபுரம்புதூர் பகுதியில் டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி சாலைகள், வீதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சியில் கடந்த வாரங்களை ஒப்பிடும் போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதாகவும், தற்போது 240 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பஸ்நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அச்சகத்திற்கு சீல்
இதற்கிடையே ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்படும் கடைகளை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல்-பரமத்தி சாலையில் அச்சகம் ஒன்று ஊரடங்கை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று விசாரணை செய்தபோது சுமார் 5 பணியாளர்களுடன் அச்சகம் இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து பணியாளர்களை வெளியேற்றிவிட்டு அச்சகத்திற்கு அதிகாரிகள் குழுவினர் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story