பரமத்திவேலூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பரமத்திவேலூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் ஸ்ரேயாசிங் முதல் முறையாக பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து, அதிலிருந்து உரம் தயாரிக்கும் எந்திரங்கள் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம், மாதம் எவ்வளவு உரம் தயாரிக்க முடியும் என்றும், அதன் வர்த்தகம் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து உழவர்பட்டியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். கட்டிட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
தொடர்ந்து பரமத்தி பேரூராட்சிக்கு சென்ற கலெக்டர் ஸ்ரேயாசிங், அங்கு நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு நிறைவேற்றப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story