நாமக்கல் உழவர்சந்தை அரசு பள்ளிக்கு இடமாற்றம்
நாமக்கல் உழவர்சந்தை தற்காலிகமாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நாமக்கல், ஜூன்.25-
உழவர்சந்தை
நாமக்கல் உழவர் சந்தையை தற்காலிகமாக நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்காத வகையில் நாமக்கல் உழவர் சந்தை தற்காலிகமாக நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது. இந்த சந்தையில் தினந்தோறும் 50 விவசாயிகள் மட்டும் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவார்கள்.
காய்ச்சல் இருந்தால் வரக்கூடாது
விவசாயிகள் அனைவரும் கட்டாயம் 2 முககவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண்மை விற்பனைத்துறை அலுவலர்கள் சரியான முறையில் இடஒதுக்கீடு செய்துதர வேண்டும். விவசாயிகள் தங்கள் இடத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் வகையில் இடைவெளியை குறியிட வேண்டும். கொரோனா தொற்றின் காரணமாக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
சந்தைக்குள் முககவசம் அணிந்து வராத விவசாயிகள், பொதுமக்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உழவர் சந்தைக்கு வரக்கூடாது. இதேபோல் பொதுமக்களும் தங்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உழவர் சந்தைக்கு வரக்கூடாது.
பொருளாதாரம் பாதிப்பு
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அவர்களின் பொருளாதாரம் பாதிப்படைய கூடாது என்பதற்காக காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை உழவர் சந்தை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை விவசாயிகள், பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சரியாக கடைபிடிக்கப்படாவிட்டால் சந்தை செயல்பாடு நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, வேளாண் விற்பனை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story