திரவுபதி அம்மன் கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருட்டு


திரவுபதி அம்மன் கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Jun 2021 7:26 PM GMT (Updated: 24 Jun 2021 7:26 PM GMT)

திரவுபதி அம்மன் கோவில் உண்டியல்களை மர்ம நபர்கள் தூக்கிச்சென்று பணத்தை திருடிச்சென்றனர்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிச்சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள், அந்த கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் மூலஸ்தான கதவின் பூட்டை உடைக்க முடியாததால் இரும்பு கேட் கம்பியை வளைத்து, உள்ளே சென்று அங்கிருந்த 2 உண்டியல்களை தூக்கிக்கொண்டு, கோவிலின் அருகே உள்ள தைலமர காட்டிற்கு சென்றனர். அங்கு உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. பெரிய உண்டியலில் சுமார் ரூ.85 ஆயிரம், சிறிய உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நாட்டார் குணசேகரன் (வயது 67) கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கைரேகை நிபுணர் சத்தியராஜ் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார். போலீஸ் மோப்ப நாய் ‘டிக்சி’ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story