வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து இளம்பெண் மீண்டும் போராட்டம்
செங்கோட்டை அருகே வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து இளம்பெண் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியரை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா (22) செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள செல்போன் கோபுரம், அரசு ஆஸ்பத்திரியின் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அபிதா போராட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் அபிதா தனது வீட்டின் ேமற்கூரை மீதும், அவரது அக்காள் பெர்னாஜூலியா வீட்டின் முன்பு தரையில் அமர்ந்தும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, பிரான்சிஸ் அந்தோணியை தாக்கிய போலீசார் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இதை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள், அக்காள்-தங்கையின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, தங்கள் ஊரின் பெயரை கெடுக்கும் நோக்கத்திலும், பிறரின் தூண்டுதலின் காரணமாகவும் போராட்டம் நடத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் போராட்டத்திற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story