நெல்லை அருகே ரவுடி கொலையில் 5 பேர் கைது
நெல்லை அருகே, ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை;.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் மாரியப்பன் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர், பெயிண்டிங் வேலைக்கும் சென்று வந்தார். ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இவர் அப்பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் மாரியப்பன் கொலை தொடர்பாக கொண்டாநகரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆறுமுகநயினார் (28), இசக்கி மகன் விக்னேஷ் (25), அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த கண்ணப்பன் மகன் மணி (21), சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் பிரகாஷ் (25), கண்ணையா மகன் இசக்கிப்பாண்டி (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான பிரகாஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மாரியப்பன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது தாயாரிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதற்காக மாரியப்பனின் நண்பரை எனக்கு சாதகமாக பயன்படுத்தி மதுகுடிக்க அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தேன். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி எனது நண்பர்களுடன் அங்கு வைத்து மது குடிக்க வைத்தேன். போதை தலைக்கேறியதும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை வெட்டி கொன்றோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story