மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி


மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 25 Jun 2021 2:08 AM IST (Updated: 25 Jun 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து முகாம்களுக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சியிலும் இதற்காக மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் கட்டமாக பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு மாநகராட்சி மருத்துவ குழுவினர் சென்றனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது வீடுகளில் இருந்த முதியவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.  இந்த பணி மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story