கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை


கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2021 2:35 AM IST (Updated: 25 Jun 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவினாசி
அவினாசியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கூட்டு குடிநீர் திட்டம்
அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் வணிக வளாகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குழாய் இணைப்பு வழங்கி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அவினாசிக்கு மிக அருகில் திருப்பூர் மாநகரம், புதிய திருப்பூர் ஆகியவை உள்ளன. 
இங்கு ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பல ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அவினாசி சுற்றுவட்டார பகுதியில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இதனால் அவினாசியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே குடிநீரும் அதிகம் தேவைப்படுகிறது. 
குடிநீர் தேவை
தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 11 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையுள்ளது. ஆனால் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் குடிநீர் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி குழாய் உடைப்பு, மின்சப்ளை நிறுத்தம் போன்ற காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடிநீர் வினியோகம் தடைபடுவதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவினாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் ரூ.241 கோடி மதிப்பீட்டில் அவினாசி-அன்னூர் - மோப்பிரிபாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடந்துவருகிறது. இதற்காக அவினாசி சூளை, வ.உ.சி.காலனி பூங்கா, வாரச்சந்தை,  ராயம்பாளையம் ஆகிய இடங்களில் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
தீர்வு
கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிவடையும் நிலை உள்ளது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிகள் முடிவடைந்ததும் கூடிய விரைவில் அவினாசி நகர மக்களின் பல ஆண்டு கால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story