வைக்கோல் விற்பனையில் விவசாயிகள் தீவிரம்


வைக்கோல் விற்பனையில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Jun 2021 2:47 AM IST (Updated: 25 Jun 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி பகுதியில் வைக்கோல் விற்பனையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தளி
அமராவதி பகுதியில் வைக்கோல் விற்பனையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி பணி
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை அடிப்படையாக கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் சார்ந்த தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி விவசாயிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கால்நடைகள் மூலம் பால், வெண்ணெய், தயிர், சாணம் மற்றும் பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற்று வருகின்றனர்.
நெல் அறுவடை
இந்த சூழலில் அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதை இடைத்தரகர்கள் மூலம் அறிந்துகொண்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் வெளிமாவட்ட விவசாயிகள் அமராவதி பகுதிக்கு வந்து வைக்கோலை சேகரித்த வண்ணம் உள்ளனர்.
கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை எந்திரத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் வைக்கோல்கள் வயல்வெளிகளில் பரவலாக சிதறி விடுகிறது. அவற்றை கட்டு கட்டும் பணிக்காக வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் எந்திரங்கள் அமராவதி பகுதிக்கு வந்துள்ளன.
வைக்கோல் விற்பனை
எந்திரத்தின் மூலமாக மணிக்கு 30 முதல் 40 கட்டுகள் வீதம் நாள் ஒன்றுக்கு 300 கட்டுகள் வரையிலும் கட்டப்படுகிறது. எந்திரத்தின் மூலமாக கட்டப்படுகின்ற வைக்கோல் கட்டு ஒன்று ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது. அது மட்டுமின்றி உள்ளூர் கால்நடை வளர்ப்போரும் வைக்கோல் கட்டுகளை வாகனங்கள் மூலமாக சேகரித்து ஒரு இடத்தில் போர் போட்டு பக்குவப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற தீவனப் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியும் என்பதால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story