தக்காளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


தக்காளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 25 Jun 2021 3:02 AM IST (Updated: 25 Jun 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போடிப்பட்டி
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாற்று சாகுபடி
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் குறுகிய காலத்தில் சீரான வருமானம் தரக்கூடியது என்ற வகையில் காய்கறிகள் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பல விவசாயிகள் தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்தனர். மேலும் பல விவசாயிகள் தக்காளி சாகுபடியை கைவிட்டு மாற்று சாகுபடிக்கு மாறினர். 
இந்தநிலையில் தற்போது தக்காளி விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இதனையடுத்து மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நிலையற்ற விலை
காய்கறிகளின் நிலையற்ற விலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதிலும் தக்காளி சாகுபடி என்பது சவாலான விஷயமாகவே உள்ளது. சில நேரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையாகிறது. சில நேரங்களில் 15 கிலோ கொண்ட பெட்டியே ரூ.40-க்கு தான் விற்பனையாகிறது. 
இதனால் அறுவடை சமயத்தில் என்ன விலைக்கு விற்பனையாகுமோ என்ற தவிப்பில் தான் விவசாயிகள் இருக்க வேண்டியதுள்ளது. ஆனாலும் விவசாயமே தொழிலாகக் கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் மீண்டும் மீண்டும் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.
குழித்தட்டு முறை
விவசாயத்துக்கென ஆயிரக்கணக்கான கோடிகளை அரசாங்கம் ஒதுக்குகிறது. இதில் இலவசங்கள், தள்ளுபடிகள் என்பவை எல்லாவற்றையும் விட விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதே மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே எந்தெந்த பகுதிகளில் என்னென்ன விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் விளைகிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல அவற்றை மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றுக்கான வழிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஆரம்ப கட்டங்களில் தக்காளி விதைகளை வாங்கி நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து வந்தோம். ஆனால் தற்போது குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தக்காளி நாற்றுகளை நாற்றுப் பண்ணைகளிலிருந்து வாங்கி வந்து கிணற்றுப் பாசனத்தில் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது அமராவதி அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் காய்கறி சாகுபடிப்பரப்பு குறைந்து வரத்து குறைவதால் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் தக்காளியில் அடி மேல் அடி வாங்கிய பல விவசாயிகள் தக்காளி சாகுபடியைக் கைவிட்டு விட்டனர். எனவே வரும் காலங்களில் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர். 

Next Story