பேரம்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் துணை மின் நிலைய கட்டிடம் சீரமைக்க கோரிக்கை


பேரம்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் துணை மின் நிலைய கட்டிடம் சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2021 10:58 AM IST (Updated: 25 Jun 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் துணை மின் நிலைய கட்டிடம் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தின் அருகே மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்குவதற்கு ஏதுவாக 4 கட்டிடங்களில் 8 குடியிருப்புகளும் கட்டப்பட்டது. இந்த துணை மின் நிலையமானது 1983-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த துணை மின் நிலையத்தில் இருந்து பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, பாகசாலை, நரசிங்கபுரம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, கூவம், மப்பேடு, கீழச்சேரி, சத்தரை, பண்ணூர் போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களும் மின்சார கட்டணம் செலுத்துவதற்காகவும், புதிய மின் இணைப்பு பெறுவதற்காகவும் இந்த துணை மின் நிலையத்திற்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.

இங்கு 25-க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். கட்டிடம் கட்டப்பட்டு 37 ஆண்டுகள் ஆவதால் இந்த துணை மின் நிலையத்தில் கட்டிடத்தின் மேற்புறத்தில் மரங்கள் வளர்ந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்கூரையில் உள்ள சிமெண்டுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்திலேயே மின்வாரிய பணியாளர் தினமும் வந்து தங்கி மின்சார பணிகளையும், மின் கட்டணம் வசூல் செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தின் அருகே உள்ள 4 மின்வாரிய குடியிருப்புகளும் முழுவதுமாக சேதமடைந்து கட்டிடத்தின் மீது முட்செடிகள், மரங்கள் வளர்ந்து கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதன் காரணமாக இந்த குடியிருப்புகளில் மின்வாரிய ஊழியர்கள் யாரும் தங்குவது கிடையாது. இருப்பினும் அங்கு பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தேவையான மின்சாதன பொருட்களை ஊழியர்கள் அங்கு வைத்து விட்டு செல்கின்றனர். மின்வாரிய பணியாளர்களும் அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிமெண்டு பூச்சிகள் உதிர்ந்து உள்ளே இருக்கும் செங்கற்கள் மட்டும் தெரிகிறது. மேலும் ஆங்காங்கே முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக இங்கு பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.

இதனால் இங்கு பணிக்கு வரும் மின்வாரிய ஊழியர்கள் தினமும் பயத்துடன் வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழமை அடைந்ததால் மழைக்காலங்களில் மழைநீர் கட்டிடத்திற்குள் அடிக்கடி வருவதால் மின் ஊழியர்கள் மிகவும் அவதியுற்றபடி வேலை செய்கின்றனர். மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் இதில் பாதிக்கப்படும் நிலை அதிகமாக உள்ளது.

எனவே பழமையான இந்த இந்த துணைமின் நிலைய கட்டிடம் மற்றும் 4 குடியிருப்பு கட்டிடங்களையும் முழுவதுமாக இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story