குழந்தையை போல வளர்த்த நாயையும் கொன்று விட முடிவு: கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் கடன் பிரச்சினையால் குழந்தையை போல வளர்த்த நாயையும் கொன்று விட முடிவு செய்து, கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குழியில் புதைத்து விடுங்கள் என நண்பர்களுக்கு அனுப்பிய செல்போனில் தகவலில் உருக்கமாக கூறி உள்ளனர்..
சென்னை,
சென்னை மந்தைவெளி ஏ.எம். கார்டன் பகுதியில் உள்ள சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் பால் விநியோகம் செய்துள்ளார். அதேபோல் மாதாந்திர சீட்டு நடத்தியும் வந்துள்ளார்.
லோகநாதனின் மனைவி சாந்தி (49). இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. சொந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ‘சாம்’ என்ற நாய் ஒன்றை தங்களது குழந்தையை போல செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.
லோகநாதன் பல தொழில்கள் செய்து வந்தாலும் கொரோனா ஊரடங்கால், அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால், இவர் அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் லோகநாதன் கடனையும், அதற்கு உண்டான வட்டியையும் திருப்பி கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். மேலும், மாதாந்திர சீட்டும் முடிவடைந்த நிலையில், அந்த பணத்தையும் திருப்பி கொடுப்பதில் லோகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பி கொடுக்க அவரால் முடியவில்லை
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தினமும் லோகநாதன் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். கடன் சுமை அதிகமானதால், மனம் உடைந்து விரக்தியடைந்த லோகநாதனும், அவரது மனைவி சாந்தியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். ‘தாங்கள் இறந்தால், குழந்தையை போல வளர்த்த நாயின் நிலை என்ன ஆகும்?’ என கவலையடைந்த அவர்கள், நாயை கொன்று, தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக நாயின் தலையில் பிளாஸ்டிக் பையை கொண்டு மூச்சு விட முடியாத அளவுக்கு முழுவதுமாக மூடி, நாயின் கழுத்தோடு இறுக்க கட்டிவிட்டனர்.
பின்னர் இருவரும் இரவு வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் பையை கொண்டு தலையை மூடி கட்டப்பட்ட நாய், அதனை கடித்து கிழித்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. பின்னர் நாய் இரவில் கத்திக்கொண்டே இருந்ததால், அக்கம்பக்கத்தினர், லோகன்நாதன் வீட்டு கதவை வந்து தட்டினர். வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த அபிராமபுரம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு லோகநாதன் தனது நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், தங்களது வீட்டை விற்று அதில் வரும் பணத்தை தங்களுக்கு கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுக்கும்படி தெரிவித்துள்ளனர். அதில் கடன் கொடுக்க வேண்டிய நபர்களின் பெயர்களையும் இணைத்து அனுப்பி உள்ளனர். மேலும் தங்களது உடல்களை ஒரே குழியில் புதைத்து விடுங்கள் எனவும், அந்த செல்போன் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story