விதவைப்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விதவைப்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி
விதவை பெண்
கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வசிக்கும் செல்வம் மனைவி சாந்தி(வயது 57) ஆவார். இவரது கணவர் செல்வம் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து சாந்தி கூலி வேலை செய்து தனது 2 மகள்களை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை சுபேதார் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
2 மர்ம நபர்கள்
இடையர் தெருவில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட சாந்தி திருடன் திருடன் என கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் நகையை பறித்த மர்மநபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து சாந்தி மற்றும் அக்கம்பக்கதினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் ரேஷன் கடையில் இருந்து சாந்தி நடந்து வந்த பாதையில் எங்கேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் விதவை பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story