திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை


திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 25 Jun 2021 10:16 PM IST (Updated: 25 Jun 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம்,  நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த  விவசாயிகள் நெல்  அறுவடை செய்து நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வந்தனர். 

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு கொள்முதல் பணி நடைபெற வில்லை என்று தெரிகிறது.

மழையில் நனைந்தநெல் மூட்டைகள்

 ஆனால் அந்த பகுதி விவசாயிகள் அதிகளவில் மூட்டைகளை எடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.  
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டிட வசதி என்று பெரிதாக இல்லாத காரணத்தால், பெரும்பாலான மூட்டைகள் திறந்த வெளி பகுதியிலேயே வைக்கப்பட்டு இருந்தன.

 இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. இதில் பெரும்பாலான மூட்டைகள் நனைந்து போய்விட்டது. தற்போது நனைந்த நெல்கள் முளைக்க தொடங்கி உள்ளது. 

இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தொடர்ந்து தற்போது அடிக்கும் வெயிலில் நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகள் குற்றச்சாட்டு

அதே நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்காமல், வியாபாரிகள் எடுத்து வரும் மூட்டைகளையே அதிகாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

 இதனால் விவசாயிகளின் மூட்டைகள் தேக்கம் அடைந்து, இதுபோன்று மழையில் நனைந்து வீ ணாகி வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். 

எனவே இந்த நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story