வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் இடையே காற்றில் பறந்த சமூக இடைவெளி
வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை
வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமூக இடைவெளி
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் பலர் விதிகளை மீறி இரவு வரை கடைகளை திறந்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் உரிய சமூக இடைவெளியே கடைபிடிப்பதில்லை. தேயிலை இலைகளை அளவை செய்யும் இடங்களிலும் கூட்டமாக நிற்கின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒத்துழைக்க வேண்டும்
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
வால்பாறை மலைப்பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வியாபாரிகள், தேயிலை தோட்ட நிர்வாகங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வால்பாறை பகுதி வெளியூர்களில் இருந்து யார் வந்தாலும் வியாபாரிகள், எஸ்டேட் நிர்வாகத்தினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம்.
கொரோனா பரவலை தடுக்க வால்பாறை பகுதி மக்களும், எஸ்டேட் நிர்வாகங்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story