விவசாயி உள்பட 2 பேர் பலி


விவசாயி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2021 11:07 PM IST (Updated: 25 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஆலங்குடி,ஜூன்.26-
வெவ்வேறு விபத்துகளில்  விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
லாரியில் ேமாதல்
ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50). சம்பவத்தன்று இவர் கறம்பக்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரியின் டீசல் டேங்கில் கோவிந்தன் ஓட்டி வந்த மொபட் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். டீசல் டேங்கில் மொபட் மோதியதில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தீப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
கறம்பக்குடி அருகே உள்ள மங்கான் கொல்லை பட்டியை சேர்ந்தவர் தங்க பிரகாசம் (37). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வெட்டன் விடுதி கடை வீதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வெட்டன் விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட தங்க பிரகாசம் படுகாயமடைந்தாா். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர்  படுகாயமடைந்த தங்கபிரகாசத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே தங்க பிரகாசம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிறுவன் படுகாயம்
இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள கணக்கன்காட்டைச் சேர்ந்தவர் புஷ்பபராஜ். இவரது மகன் மருதமலை (11). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் மறவன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக திருவாரூர் கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்த கோபு (35) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவன் படுகாயமடைந்தான். இதை கண்ட அக்கம்பக்கத்தினர்  சிறுவனை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை புஷ்பராஜ் மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபுவை கைது செய்தனர்.

Next Story