தடுப்பூசி போட திரண்ட பொதுமக்கள்
கோத்தகிரி தனியார் பள்ளியில் தடுப்பூசி போட பொதுமக்கள் திரண்டனர். அங்கு ஒரே நாளில் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல், மாவட்ட நிர்வாகத்தின் தடுப்பு நடவடிக்கையால் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
சமூக இடைவெளி
இதையொட்டி அங்கு தடுப்பூசி போட காலை 6 மணி முதல் பொதுமக்கள் குவிய தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. மேலும் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த பணியில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பார்த்திபன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர். இந்த முகாமில் மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஏமாற்றம்
ஆனால் அதற்கு மேல் தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் தடுப்பூசி போட வந்த பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். எனினும் அங்கு இன்றும்(சனிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற பொதுமக்கள், மீண்டும் இன்று வந்து போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story