ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் பணியிட மாற்றம்


ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:17 PM IST (Updated: 25 Jun 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

ஆம்பூர்

தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு ஊரடங்கு விதிகளை மீறி சிலர் கொரோனா பரவும் விதமாக கூடி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசை அழைத்து, ஏன் இப்படி  கூட்டம் கூடியுள்ளார்கள்?, சரியாக பணி செய்ய மாட்டீர்களா? என்று கோபத்துடன் கேட்டு, அவரை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பெண் போலீஸ், அதிகாரி பேசிக்கொண்டிருந்த போதே போலீஸ் நிலைய மாடியில் இருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த சக அதிகாரிகள் ஓடிச்சென்று பூச்சி மருந்து கலந்த தண்ணீர் பாட்டிலை தட்டிவிட்டு அவரை காப்பாற்றியுள்ளனர்.

பணியிட மாற்றம்

இதுகுறித்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசை மற்ற 2 பெண் போலீசார் திருப்பத்தூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பெண் போலீஸ் புகார் எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக தெரிகிறது. போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்போலீசை, அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். 

Next Story