சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
கொரோனா தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்தனர். அங்கு கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
கொரோனா தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்தனர். அங்கு கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரிக்கு கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதை தொடர்ந்து நேற்று 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்த அதிகாலை முதலே பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக அலைக்கழிக்கப்பட்டதால் 2-வது டோஸ் செலுத்தவும், முதல் டோஸ் செலுத்தவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் நுழைவுவாயில் மூடப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையமான ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் கூட்டமாக இருப்பது, தடுப்பூசி போடும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நெரிசல் இல்லாமல் நிற்க இருக்கைகள் போட வேண்டும். ஒரு இடத்தில் மட்டும் டோக்கன் வினியோகிக்கப்படுவதால் கூட்டம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, 2 இடங்களில் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
குடிநீர் வசதி
மேலும் பொதுமக்கள் பதற்றம் இல்லாமல் டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கொரோனா தடுப்பூசி செலுத்தவும், டோக்கன் பெறவும் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
மேலும் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்பதால், அவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது. டோக்கன் வழங்கும் இடத்தில் சாமியானா பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story