குழந்தைகள் பாதிப்பை தடுக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு


குழந்தைகள் பாதிப்பை தடுக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 11:37 PM IST (Updated: 25 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.

நாகர்கோவில்:
கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.
ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாவட்ட அளவிலான மறுசீராய்வு ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், வருவாய் அதிகாரி ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, துறைசார்ந்த அலுவலர்களிடையே ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:-
விழிப்புணர்வு
குமரி மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலகின் பணிகள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 
குழந்தைகள் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீசார் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சியினை துறை அலுவலர்களுக்கு, மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் வழங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் இல்லங்களில் உள்ள சிறார் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா 3 - வது அலை அதிகளவில் குழந்தைகளை தாக்கும் என்பதால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வீடு, வீடாக சென்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 3 - வது அலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கினால் அவற்றை அனைத்து பெற்றோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
10 குழந்தை திருமணங்கள் தடுப்பு
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்து பாதுகாப்பு அல்லது பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறிந்து உரிய கள ஆய்வு மேற்கொண்டு அத்தகைய குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும்  நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலைமை குறித்தும், சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் வழங்கப்படும் தண்டனை குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.
72 குழந்தை நல இல்லங்கள்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசும்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 72 குழந்தைகள் நல இல்லங்கள் செயல்படுகின்றன. தற்சமயம் கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் கருத்துரு தயார் செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது பல்வேறு குழந்தை காப்பகங்களில் பணிபுரியும் 876 பணியாளர்களில் 740 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா 3 - ஆம் அலையில் இருந்து குழந்தைகளை காக்கும் விதமாக மாவட்டத்திலுள்ள 72 குழந்தை இல்லங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லங்களிலிருந்து பாதுகாப்பாக பெற்றோரிடம் சென்ற குழந்தைகள் குறித்தும், அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும் கேட்டறியப்பட்டு வருகிறது. 
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
 நிகழ்ச்சியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ், இணை இயக்குனர் ராஜ்சரவணகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜெயபிரகாஷ், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி சரோஜினி, அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், போலீஸ் அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், குழந்தைகள் நலன் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story