80 சதவீதம் பேருக்கு நிவாரண நிதி மளிகை பொருட்கள் வினியோகம்


80 சதவீதம் பேருக்கு நிவாரண நிதி மளிகை பொருட்கள் வினியோகம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:39 PM IST (Updated: 25 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் ரேஷன் அட்டைதாரர் களுக்கு நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை

கோவை மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் ரேஷன் அட்டைதாரர் களுக்கு நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நிவாரண நிதி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி முதற் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தற்போது 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி தகுதியானவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று அந்த பொருட்களை வாங்கி வருகிறார்கள். 

பொதுமக்கள் கூட்டம் 

இந்த நிலையில் 14 வகையான மளிகை பொருட்களின் இருப்பு மிகக் குறைவாக உள்ளதால் சில ரேஷன் கடைகளில் அவை வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மட்டும் வழங்கப்படுகிறது. 

இதனிடையே மளிகை பொருட்களை பயனாளி களுக்கு வினியோகித்து முடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து மளிகை பொருட்கள் வாங்க ரேஷன் கடைகள் முன்  பொதுமக்கள் திரண்டனர்.

 குறிப்பாக கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடை முன் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 

கலைந்து சென்றனர் 

இதையடுத்து அங்கு வந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் அவர் களிடம் இந்த மாதம் இறுதி வரை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். 

இதனிடையே பூமார்க்கெட் உள்ளிட்ட ஒருசில ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் இருப்பு குறைந்தது. 

இதைத்தொடர்ந்து குடோன்களுக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டியது இருந்ததால், கடை ஊழியர்கள் பொருட்கள் வினியோகம் இல்லை என்று கடை முன் அறிவிப்பு பலகை வைத்து சென்றனர். 

இதனால் அந்த கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் அவதியடைந்தனர். 

80 சதவீதம் பேர் 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, நாளைக்குள் (இன்று) மளிகை பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. 

மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்கள் 10 லட்சத்து 31 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டது என்றார். 


Next Story